Sunday 10 March 2024

 கடலூர் பகுதி மாதாந்திர கூட்டம் மற்றும் மகளிர் தின சிறப்பு கூட்டம்

கடலூர் பகுதியின் மகளிர் தின விழா 09.03.2024 சனிக்கிழமை மதியம் 03:00 மணியளவில் சங்க வளாகத்தில் நடைபெற்றது. திரளான தோழியர்கள் பங்கேற்றனர். தோழியர் V.விஜயலட்சுமி தலைமையேற்றார். தமது தலைமை உரையில் மகளிர் தினத்தை ஒட்டி தரப்படும் சில சலுகைகளை நகைச்சுவையோடு எடுத்துரைத்தார். மகளிர் தின வரலாற்றை சுருக்கமாக கூறினார். அரசியல், ராணுவம், விஞ்ஞானம் என அனைத்து துறைகளிலும் பெண்கள் பிரகாசித்தாலும் சில நாடுகளில் அடிப்படைக் கல்வி கூட கற்க முடியாத நிலையில் உள்ளதையும் சுட்டிக்காட்டினார். நமது கடலூர் பகுதியின் சார்பில் அரசு பள்ளியில் பயிலும் ஒரு மாணவிக்கு அவர் படிப்பதற்கு தேவையான உதவிகளை செய்யலாம் என்ற கருத்தினை முன் வைத்தார். அது அனைவராலும் ஏற்கப்பட்டது. தமது பங்காகவும் துவக்க நிதியாகவும் ₹2,000 வழங்கினார். 

வரவேற்புரையில் தோழியர். மணிமேகலை அவர்கள் அனைவரையும் வரவேற்றதோடு உடற்பயிற்சி, ஆரோக்கியம், உடல் நலம் பேணுதல், நோயற்ற வாழ்வு போன்றவைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டி வலியுறுத்தினார். பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை இன்னும் நிலவுவதை வருத்தத்துடன் பதிவு செய்தார். 

சிறப்புரையில் தோழியர் சவிதா கிருஷ்ணகுமார் அவர்கள் பெண்களுக்கான அதிகாரம், மகளிர் தமது மதிப்பை உணர்தல், அவர்களுக்கான வாய்ப்பு, வளங்களை பயன்படுத்துவதற்கான சுதந்திரம் இவற்றோடு இந்த ஆண்டு மகளிர் தின ஆய்வு பொருளான "Invest in women: Accelerate Progress" பற்றியும் மகளிர் சுதந்திரமாகவும் சுயமாகவும் செயல்படுவதற்கான தேவையைப் பற்றியும் எடுத்துரைத்தார். 

மேலும் பணி ஓய்வுக்குப் பின் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், அதிலிருந்து மீள்வதற்கான வழிகளைப் பற்றியும், நிகழ்காலத்தில் வாழ்தல், விரைவான முதுமையை தவிர்த்தல் (premature aging) போன்ற பல புதிய செய்திகளை பகிர்ந்து கொண்டார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட மகளிர் அனைவரும் கௌரவிக்கப்பட்டனர். 

தோழர். P.ஜெயராமன் அவர்கள் தனது வாழ்த்துரையில் Pensioners' Patrika வில் உள்ள மகளிர் சிறப்பு செய்திகளை பகிர்ந்து கொண்டார். குடும்ப பென்சனர்களுக்கு நமது AIBSNLPWA இயக்கம் ஆற்றும் சேவைகளை குறிப்பிட்டார். மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், தில்லையாடி வள்ளியம்மை, முதல் பெண் கவுன்சிலர் தாயாராம்மாள் ஆகியோரை பற்றிய செய்திகளை பகிர்ந்து கொண்டார்.

மாவட்ட செயலர் தோழர் R.அசோகன் அவர்கள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்தார். குடும்ப பென்சனர்கள் பிரச்சனை தீர்வில் நமது சங்க செயல்பாடுகள் பற்றி எடுத்துரைத்தார். 

PAN-Aadhar இணைக்காதவர்கள் அதை உடனடியாக செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் மாவட்ட சங்கம் எடுத்துள்ள முக்கியமான பிரச்சனைகளை பற்றி விளக்கினார். 

தோழியர் P.கமலா தனது வாழ்த்துரையில் எடுத்துக்காட்டாக சொல்லக்கூடிய வகையில் செயல்பட்ட மகளிர் ஆளுமைகளைப் பற்றி குறிப்பிட்டார். காஃபி டே என்ற நிறுவனத்தின் ஸ்தாபகர் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட போது அவரது மனைவி மன உறுதியுடன் நிறுவனத்தை மீட்டெடுத்து வெற்றிகரமாக நடத்தி வருவதை குறிப்பிட்டார்.

மாவட்ட தலைவர் தோழர்.K.சந்திரமோகன் அவர்கள் தனது வாழ்த்துரையில் குழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பேசினார். மேலும் குழந்தைகளுக்கு நாம் அவசியம் சொல்லிக் கொடுக்க வேண்டியவற்றைப் பற்றி விரிவாக பேசினார். 

மூத்த தோழர்.KVR அவர்கள் தனது வாழ்த்துரையில் எவ்வாறு ஒரு பெண் எல்லா வகையிலும் உறுதுணையாக உள்ளார் என்பதையும், இரும்பு பெண்மணிகள் என பெயரெடுத்த ஆளுமைகள் சிலரைப் பற்றியும் குறிப்பிட்டார். முதன் முதலில் குடும்ப ஓய்வூதியருக்கு FMA வாங்கி கொடுத்தது கடலூர் மாவட்ட AIBSNLPWA சங்கம்தான் என்பதை பெருமையுடன் பதிவு செய்தார். 

தோழர்.P.சாந்தகுமார் அவர்கள் தமது வாழ்த்துரையில் கணக்கதிகாரிகள் உருவாக்கியுள்ள அறக்கட்டளை வாயிலாக பெற்றோரை இழந்த அரசுப்பள்ளி மாணவர்கள், மாணவிகள், முதியோர் இல்லங்கள், தன்னார்வ சேவை நிலையங்கள் இவற்றுக்கு ஆண்டுதோறும் 15 லட்சம் ரூபாய் அளவிற்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதை குறிப்பிட்டார். 

தோழர்V.நீலகண்டன் தனது வாழ்த்துரையில் பெண்களை மதித்து மரியாதையாக நடத்த கற்றுக் கொடுத்தது நமது தொழிற்சங்கங்களே என்பதை பதிவு செய்தார். மகளிர் தின வரலாறு, பெண்கள் உடல்நலம் பராமரிக்க வேண்டியதன் அவசியம், பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றுவது, சமுதாயத்தோடு இணைந்திருப்பது ஆகியவற்றின் அவசியத்தை பற்றியும் எடுத்துரைத்தார். 

தோழியர் மேகலா அவர்கள் தனது நன்றியுரையில் "வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நட்டாலும் விருட்சமாய் வளர்ந்து பலனளிப்பவள் பெண்" என்று குறிப்பிட்டு புத்தகங்கள் வாசிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி நன்றி கூறி நிறைவு செய்தார்.





No comments:

Post a Comment