Tuesday, 13 December 2022

செய்தித் துளிகள் 13.12.2022

செய்தித்துளிகள் 13.12.2022

1. நமது சங்கத்தின் நான்காவது அகில இந்திய மாநாடு டிசம்பர் 2 & 3 தேதிகளில் விசாகப்பட்டினத்தில் சிறப்பாக நடைபெற்றது. நமது மாவட்டத்தில் இருந்து 22 சார்பாளார்களும், நான்கு பார்வையாளர்களும் கலந்து கொண்டனர். நம்முடன் விருதுநகரைச் சேர்ந்த அழகர் அவர்களும் கலந்து கொண்டார். 30/11/2022 அன்று விழுப்புரம் ரயில் நிலையத்தில் கூடினோம். அனைவருக்கும் விழுப்புரம் பகுதி தோழர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர். தோழர்கள் வெற்றி, கலிவரதன் ஆகியோர் மதியம் ,இரவுக்கான உணவு ஏற்பாடுகளை செய்து இருந்தது நெகிழ்வை தந்தது.  தோழர் சண்முகசுந்தரம் அவர்கள் கிறிஸ்துமஸ் கேக் பார்சலை தந்தது நமது சங்கம் குடும்ப அமைப்பைக் கொண்டது என்பதை மீண்டும் நிரூபிக்கப்பட்டது. தோழர் சங்கரன் அவர்கள் ஒரு பை நிறைய பிஸ்கட் பாக்கெட்களை தந்து தனது அன்பை வெளிப்படுத்தினார்.


           அகில இந்திய மாநாட்டின் விழா குழுவினர் சிறப்பான முறையில் மாநாட்டுப் பணிகளை செய்திருந்தது அனைவரது பாராட்டுதல்களை பெற்றது. மருத்துவ முகாம்களை அமைத்திருந்தது உறுப்பினர்களுக்கு பேருதவியாக இருந்தது. தோழர் P.S ராமன் குட்டி அவர்களது தலைமை உரையோடு மாநாடு இனிதே தொடங்கியது. 


பொதுச் செயலாளர் கங்காதர ராவ் அவர்கள் 2009 ஆண்டு முதல் நமது மத்திய சங்கம் கடந்து வந்த பாதையை எளிய முறையில் எடுத்துரைத்தார். பின்னர் தோழர் D கோபாலகிருஷ்ணன் அவர்கள் கடந்த ஆறு ஆண்டுகளாக நாம் வென்றெடுத்த பல வெற்றிகளை பட்டியலிட்டார். கடந்த மூன்று ஆண்டுகளாக பல்வேறு துறைகளை சேர்ந்த பல மட்ட அதிகாரிகளையும் சந்தித்ததையும் மற்றும் பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் தொலைபேசித் துறை அமைச்சர் ஆகியோர்களை சந்தித்தததின் விளைவாக 17/10/2022 அன்று தொலைபேசித்துறை நிர்வாகத்தால் ஓய்வூதிய மாற்றம் பற்றி விவாதிக்க அனைத்து ஓய்வூதிய சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடந்ததையும் நினைவு கூர்ந்தார். பேச்சுவார்த்தையில் ஊதிய மாற்றத்தில் இருந்து ஓய்வூதிய மாற்றத்தை dealing செய்யப் போவதாகவும் , 0% ஃபிட்மன்ட் பார்முலாவில் ஓய்வூதியம் மாற்றம் தருவதாகவும் Member (service) அவர்கள் கூறியதையும் ஆனால் அனைத்து ஓய்வூதிய சங்கங்களும் 0% ஃபிட்மன்ட் பார்முலாவில் ஓய்வூதிய மாற்றத்தை  நிராகரித்ததையும் சுட்டி காட்டினார். ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின்படி ஓய்வூதிய மாற்றம் செய்யப்பட வேண்டும் என்கின்ற நமது சங்கத்தின் நிலைப்பாட்டிற்கு வலு சேர்க்கும் வகையில் பல்வேறு உச்சநீதிமன்ற தீர்ப்புகளையும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளையும் பட்டியலிட்டார். நித்தம் ஒரு பேச்சு என இருக்கும் தொலைபேசித் துறையில் உள்ள அதிகாரிகள் நிலைபாட்டால் வேறு வழி இன்றி நீதிமன்றத்தை அணுக வேண்டிய நிலையையும் எடுத்துரைத்தார். பல கட்ட பேச்சு வார்த்தைகளால் ஒரு பயனும் இல்லாததாலும் ஓய்வூதிய மாற்றம் வேண்டி நமது சங்கம் தொடுத்துள்ள வழக்கு விசாரணை கால தாமதம் ஆவதாலும் நாம் போராட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதால் போராட்ட வடிவங்களை அகில இந்திய மாநாடு முடிவு செய்ய வேண்டும் என்பதையும் தெள்ளத் தெளிவாக எடுத்துரைத்தார். ஏறத்தாழ 1:30 மணி நேரம் நமது சங்கத்தின் நிலைப்பாட்டையும் நாம் செல்லும் பாதை சரியான பாதை என்பதனையும்  வலியுறுத்தி அவர் பேசியது அனைவரது பாராட்டையும் பெற்றது. 


பின்னர் விவாதம் தொடங்கியது. ஒவ்வொரு மாநிலத்தின் உறுப்பினர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப சார்பாளர்கள் அனுமதிக்கப்பட்டு ஒவ்வொரு சார்பாளருக்கும் ஏழு நிமிடம் ஒதுக்கப்பட்டது. சார்பாளர்கள் எந்த வித தயக்கமும் இன்றி தங்களது கருத்துக்களை எடுத்து வைத்தனர். நமது சங்கம் ஒரு பரந்து பட்ட ஜனநாயக அமைப்பு என்பதால் மத்திய சங்கத்தின் நிலைபாட்டிற்கு எதிராக பேசினாலும் அவர்கள் பேச அனுமதிக்கப்பட்டனர்.  பல்வேறு கருத்துக்களின் தொகுப்புதான் ஒரு முடிவை எட்டுவதற்கு வழிவகுக்கும். ஒன்றிரண்டு சார்பாளர்களைத் தவிர 99 விழுக்காடு சார்பாளர்கள் மத்திய சங்கத்தின் செயல்பாட்டையும் எடுத்துள்ள முயற்சிகளையும் அங்கீகரித்து பேசினர். 


நமது மாவட்டத்தின் சார்பாக தோழர் P.சாந்தகுமார் அவர்கள் பேசினார். இறுதியாக போராட்டங்களை நடத்துவதற்கான முடிவு எடுக்கப்பட்டது. 13 வருடங்களில் நமது சங்கம் 70 ஆயிரம் உறுப்பினர்களை பெற்றிருந்த போதிலும் விருப்ப  ஓய்வில் சென்ற 79 ஆயிரம் பேரில் 20 ஆயிரம் பேர் தான் நம் சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்து இருப்பதை மாநாடு கவலையோடு பார்த்தது. வெளியில் இருக்கும் அந்த தோழர்களை வென்றெடுக்க நாம் முயற்சி செய்ய வேண்டும் என்று அனைத்து மாநில செயலாளர்களையும் மாநாடு கேட்டுக் கொண்டது. ஆயிரம் பேருக்கு மேல் கலந்து கொண்ட ஒரு அகில இந்திய மாநாட்டில் எந்தவித சச்சரவும் குழப்பமும் இன்றி நிகழ்வுகள் அரங்கேறியது ஆச்சரியமான ஒரு விஷயமாகும். பரந்து பட்ட ஜனநாயகமும் பன்முக கருத்து பரிமாற்றங்களும் ஒரு சங்கத்தை வலுவாக்கும் என்பதற்கு விசாகப்பட்டினம் அகில இந்திய மாநாடு சாட்சி.


     இரண்டாம் நாள் அனைத்து மத்திய சங்க நிர்வாகிகள் பேசிய பிறகு தேர்தல் நடைபெற்றது. உறுப்பினர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப அந்தந்த மாநிலங்களுக்கு பதவிகள் தெரிவிக்கப்பட்டன. மாநிலச் செயலாளர்கள் மாவட்ட  செயலாளர்களை கலந்து ஆலோசித்து தங்களுடைய மாநிலத்திற்கான நிர்வாகிகள் பெயரை மத்திய சங்கத்திற்கு அளித்தனர் 35 பதவிகளுக்கான பெயர்கள் ஒருமித்த கருத்தோடு ஏற்கப்பட்டு நிர்வாகிகள் பட்டியல் சார்பாளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.  மத்திய பிரதேசத்திற்கு ஒரு பதவி ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. தோழர்கள் D.கோபாலகிருஷ்ணன், V.வரப்பிரசாத், T.S.விட்டோபன் ஆகியோர்கள் முறையே தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். நம் மாவட்டத்தை சேர்ந்த தோழர் P ஜெயராமன் அவர்கள் அகில இந்திய உதவி பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.


2. 17/12/2022 அன்று விழுப்புரம் பகுதியில் ஓய்வூதியர் தினமும் மற்றும் பகுதி மாநாடு நடைபெற உள்ளது. நமது சங்கத்தின் மாநில தலைவர் தோழர் சுவாமிநாதன் அவர்கள் சிறப்புரையாற்ற உள்ளார்.


3. நான்காவது அகில இந்திய மாநாட்டின் வழிகாட்டுதல்படி 19/12/2022 அன்று கடலூர் பிஎஸ்என்எல் முதன்மை பொதுமேலாளர் அலுவலகம் முன்பு உணவு இடைவேளை பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அனைத்து பகுதிகளிலும் இருந்து பெரும்பாலான உறுப்பினர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு மாவட்ட சங்கம் தோழமையுடன் அழைக்கிறது. அனைவரும் அலைகடல் என திரளுவோம்.


4. 23/12/2022 அன்று கடலூர் பகுதியில் ஓய்வூதியர் தினமும், அண்ணாச்சி அவர்களுக்கு பாராட்டு விழாவும் நடைபெற உள்ளது. அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மாநிலச் செயலாளர் S.சுந்தரகிருஷ்ணன் மற்றும் சங்கத்தின் முன்னணி தோழர் A.சுகுமாரன் அவர்களும் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குவார்கள்.


5. தோழர் பன்னீர்செல்வம் அவர்களுக்கு NEPP படி ஓய்வூதிய மாற்றம் செய்யப்பட்டு உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.


6. தோழர் A.Rகலியமூர்த்தி அவர்களுக்கு commutation பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. 


7. தோழர் D.பாலாஜி JE NTS அவர்களுக்கு  8% Ex-gratia, CGHS refund பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு விட்டன. 


8. 31/03/2023 வரையில் CGHSல் சேர்பவர்களுக்கு அந்தந்த மாதத்திலேயே CGHS subscription refund தொகை வரவு வைக்கப்படும் என்று பிஎஸ்என்எல் நிர்வாகம் கூறியுள்ளது. 


 தோழர்கள் ராம்குமார், ஹாரூண் பாஷா ஆகியோர் சென்னை CCATN அலுவலகத்திற்கு நேரில் சென்று கடலூர் ஓய்வூதியதாரர்களின் பல்வேறு பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மாவட்டச் சங்கத்திற்கு உறுதுணையாக இருந்து வருகிறார்கள். அவர்களுக்கு கடலூர் மாவட்ட சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். 


தோழமையுடன், 

R.அசோகன், 

மாவட்ட செயலாளர்

கடலூர்

No comments:

Post a Comment