நமது அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர் நலச்சங்கத்தின் ஏழாவது தமிழ் மாநில மாநாடு 7/8/2022,8/8/2022 ஆகிய தேதிகளில் சேலம் ரெட்டிப்பட்டி PCC திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
உறுப்பினர்களின் வான் எட்டிய கரகோஷத்துடன் தேசியக்கொடியை டாக்டர் K மீனாட்சி சுந்தரம் ,Medical Director Vinayaga mission institute of Medical science, Salem அவர்கள் தேசியக்கொடியை ஏற்றினார். நமது மாநில தலைவர் சங்க கொடியை ஏற்றினார்.
நமது மாநிலத் தலைவர் தோழர் V ராமாராவ் அவர்கள் தலைமையில் மாநாடு இனிதே தொடங்கியது . தோழர் D விக்டர் ராஜ் அவர்கள் அஞ்சலி உரையாற்றினார். வரவேற்புக் குழு பொதுச் செயலாளர் தோழர் M கணேசன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். நமது சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் P கங்காதர ராவ் அவர்கள் துவக்க உரையாற்றினார். அவரது உரையில் நமது சங்கம் ஓய்வூதியர்கள் பிரச்சனைகளில் ஆற்றிவரும் பணிகளை அனைவருக்கும் புரியும் வண்ணம் தமிழ் கலந்த எளிய ஆங்கிலத்தில் சிறப்புரையாற்றினார் . பென்ஷன் அனாமலி வழக்கு, கூடுதல் இன்கிரிமெண்ட் வழக்கு, ஓய்வுதிய மாற்ற வழக்கு ஆகியவற்றை பற்றியும் மற்றும் எதிர்காலத்தில் நமது சங்கம் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் தெளிவாக எடுத்துரைத்தார் . நம் சங்கம் எடுக்கும் அத்தனை முயற்சிகளையும் அதனை அதனை வெளிப்படையாக பேசுவதால் ஏற்படும் தடைகளையும் எடுத்துரைத்தார். நம் சங்கம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் வெற்றி என்ற இலக்கை அடைவதே குறிக்கோளாக கொண்டுள்ளதை பெருமையோடு குறிப்பிட்டார்.
நமது சங்கத்தின் அகில இந்திய துணை பொதுச்செயலாளர் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் மாநிலச் செயலாளர் தோழர் V வரபிரசாத் அவர்களும் சிறப்புரையாற்றி நமது சங்கம் ஆற்றிவரும் பணிகள் மற்றும் அகில இந்திய மாநாட்டிற்கான ஏற்பாடுகள் பற்றியும் தகவல்களை பகிர்ந்து கொண்டார். மற்றும் சென்னை தொலைபேசி மாநிலச் செயலாளர் தோழர் S தங்கராஜ் அவர்களும், பொருளாளர் கண்ணப்பன் அவர்களும் வாழ்த்துரை வழங்கினார்கள்.
பொருள் ஆய்வுக் குழு துவக்க உரையாக நமது அகில இந்திய துணைத் தலைவர் தோழர் D கோபாலகிருஷ்ணன் அவர்கள் ஏறத்தாழ இரண்டு மணி நேரம் உரையாற்றினார் . அவையே அவரது உரையை ஆழ்ந்த அமைதியுடன் கவனித்தது. சங்கத்தின் நிதி நிர்வாகம் ஒரு வெளிப்படைத் தன்மையோடு விளங்க வேண்டும் என்பதனை வலியுறுத்தினார் . அனைத்து மாவட்ட சங்கங்களின் வங்கி சேமிப்பு கணக்கு சங்கத்தின் பெயரில்தொடங்கப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்தினார். சங்கத்தின் வங்கி சேமிப்பு கணக்கு தனிநபர் பெயரில் இருப்பதனால் ஏற்படும் விளைவுகளையும் எடுத்துரைத்தார் . எனவே இரண்டு மாதங்களுக்குள் அனைத்து மாவட்ட சங்கங்களும் சங்கத்தின் பெயரில் சேமிப்பு கணக்கை தொடங்க வேண்டும் என்பதனை தெளிவாக எடுத்துரைத்தார். மத்திய சங்கத்திற்கும் மாநிலச் சங்கத்திற்கும் அனுப்பப்படும் சந்தா எண்ணிக்கையில் முரண்பாடு காணப்படுவதையும் அவை டிசம்பர் மாதத்திற்குள் சரி செய்யப்பட வேண்டும் என்பதனையும் எடுத்துரைத்தார் . பல சங்கங்கள் மற்றும் அதிகாரிகள் ஊழியர்கள் உள்ளடக்கிய ஒரு வானவில் சங்கமாக நமது அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் நலச்சங்கம் விளங்குவதாக கூறினார் . ஒன்றுபட்ட ஒற்றுமையே நமது சங்கம் மேலும் மேலும் வேர்விட்டு தழைக்க உதவும் என்று கூறினார். புதிய ஓய்வூதிய விதிகள் 2021ல் பல சாதகமான அம்சங்கள் இருப்பதை பட்டியலிட்டு சுட்டிக்காட்டினார் . மத்திய மாநில சங்கங்கள் எடுக்கும் நடவடிக்கைகள் உறுப்பினர்கள் நலன் சார்ந்து இருப்பதால் சங்கத்தின் மீது வைக்கும் ஆழ்ந்த ஈடுபாடும் நம்பிக்கை மட்டுமே நமது சங்கம் மென்மேலும் வளர வழிவகுக்கும் என்பதனையும் வலியுறுத்தினார்.
அமைப்பு நிலை விவாதத்தில் துவக்க உரையாக மத்திய சங்கத்தின் துணைப் பொதுச் செயலாளர் தோழர் K முத்தியாலு அவர்கள் நம் சங்கம் வளர்ந்த கதையை கோர்வையாக விளக்கினார். மதுரை சென்னை கடலூர் என்று தனித்தனியாக இருந்த ஓய்வூதியர் சங்கங்களை ஒருங்கிணைத்த பெருமை 2007ல் கடலூரில் நடந்த மாநில மாநாட்டிற்குதான் சேரும் என்பதை தெளிவாக எடுத்துரைத்தார். ஓய்வூதியர்களும் பணியிலிருந்த அதிகாரிகளும் ஊழியர்களும் மாவட்டத்தின் பல்வேறு சங்கங்களும் சேர்ந்து நடத்திய கடலூர் மாநாடு அகில இந்திய சங்கம் உருவாக காரணமாக இருந்தது என்று கூறியது மாவட்டத்திற்கு பெருமை. பல்வேறு மாவட்டங்களில் உறுப்பினர் சேர்ப்பதற்கு அவர் எடுத்த முயற்சிகளை பட்டியலிட்டார். சென்னையில் நடைபெற்ற அகில இந்திய சங்கம் தொடக்க நாளை நினைவு கூர்ந்தார். அகில இந்தியா முழுவதிலும் இருந்து வந்த 450 ஓய்வூதியர்கள் கொண்டு அகில இந்திய சங்கம் தொடங்கப்பட்டதை அறிவித்தவுடன் ஒவ்வொருவரும் கனவை கட்டியணைத்து மகிழ்ச்சியை ஏற்படுத்தியது ஒரு நெகிழ்வான தருணமாக இருந்ததை நினைவு கூர்ந்தார்.
மாவட்டச் செயலாளர்களும் மற்றும் ஒரு மாவட்டத்திற்கு ஒரு சார்பாளர் என நிர்வாகிகள் பேசிய பின்பு நம்முடைய அன்பிற்குரிய மாநிலச் செயலாளர் தோழர் R வெங்கடாசலம் அவர்கள் மாவட்ட செயலாளர்கள் மற்றும் சார்பாளர்கள் எழுப்பிய பிரச்சினைகளை தொகுத்து பதிலளித்தார். கடந்த நான்கு வருடங்களில் அவர் தீர்த்து வைத்த பிரச்சனைகளை பட்டியலிட்டார். ஓய்வுக்கு ஓய்வில்லை என்பதனை பறைசாற்றும் விதத்தில் அவர் சமர்ப்பித்த மாநிலச் செயலர் செயல்பாட்டு அறிக்கையில் 24 பக்கங்களில் தீர்த்து வைத்த பிரச்சினை பட்டியலிட்டு இருந்தார். ஒரு பிரச்சனையை கையில் எடுத்தால் அதை முடிக்கும் வரையில் ஓயாமல் இருப்பது அவரது தனிப்பட்ட குணம் என்பதை எடுத்துரைத்தார் அனேகமாக அவர் கடலூர் மாவட்டத்திற்கு பலமுறை வந்த ஒரு மாநிலச் செயலாளர் . மாவட்டத்தின் அத்துணை பகுதிகளிலும் கலந்துகொண்டு சிறப்பித்தது நமக்கு பெருமை. எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற நிலைப்பாடு கொள்ளாமல் மிகுந்த நிதானமாக அமைதியாக பல்வேறு குடும்ப ஓய்வூதியர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் ஒரு வெளிச்சத்தைக் காட்டி சங்கத்தை மேம்பட்ட நிலைக்கு கொண்டு சென்றதை நன்றியோடு நாம் பார்க்கவேண்டும் .மேலும் அவரது சங்கப் பணி சிறப்பாக அமைய வாழ்த்துகிறோம். கடலூர் மாவட்டத்திற்கு அவர் அவர் கொடுத்த ஒத்துழைப்பை நன்றியோடு நினைவுகூர்வது மட்டுமல்லாமல் அவருடன் என்றும் தொடர்பில் இருப்போம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இறுதியாக புதிய நிர்வாகிகள் தேர்வு தொடங்கியது . தேர்தல் நடத்தும் பொறுப்பாளராக நமது மாவட்டத்தின் நமது மாவட்ட தலைவர் தோழர் P ஜெயராமன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது நம்முடைய மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தது. ஒரே ஒரு நிர்வாகிகள் பட்டியல் வந்ததனால் அனைவரும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். வானவில் சங்கமாக நாம் இருந்தாலும் வானவில் போல் தோன்றி மறையாமல் ஒரு எஃகு கோட்டையாக நமது சங்கம் நிலைத்து நிற்கிறது. அனைத்து நிர்வாகிகளும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டது இதனை பறைசாற்றுகிறது. புதிய மாநிலச் செயலாளர் தோழர் S சுந்தர கிருஷ்ணன் அவர்கள் நன்றி கூற மாநாடு இனிதே முடிந்தது.
AIBSNLPWA ZINDHABAD ! ஓய்வூதியர்கள் ஒற்றுமை ஓங்குக !








No comments:
Post a Comment